புதுப்பெண் தற்கொலையில் கணவர் உள்பட 2 பேர் கைது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக வாக்குமூலம்


புதுப்பெண் தற்கொலையில் கணவர் உள்பட 2 பேர் கைது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 8 Nov 2020 2:48 PM IST (Updated: 8 Nov 2020 2:48 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலத்தில் புதுப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரையும், அவரது அண்ணியையும் போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக 2 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம், 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது31). இவருக்கும் சாலைக்கிராமம் அருகே உள்ள நன்னியூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகள் கவுசல்யாவுக்கும் (27) கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது கவுசல்யாவுக்கு பேசியதைவிட குறைவாக நகை போட்டதாகவும், அதனால் மீதி நகையை கேட்டு கவுசல்யாவை கணவர் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கவுசல்யா 30.9.2020 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தந்தை முருகேசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் திருவாடானை துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கவுசல்யாவின் இறப்பு குறித்து ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சுபபுத்ரா மேல்விசாரணை நடத்தி வந்தார்.

கள்ளத்தொடர்பு

போலீசாரின் விசாரணையில், பாக்கியராஜின் அண்ணன் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இதையடுத்து பாக்கியராஜின் வீட்டில் குமாரின் மனைவி ஜோதி (வயது37), அவருடைய 2 குழந்தைகள், பாக்கியராஜ் மனைவி கவுசல்யா, தாய் வேலாயி, தந்தை ரத்தினம் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

திருமணத்துக்கு முன்பாகவே பாக்கியராஜூவுக்கும், அவரது அண்ணன் மனைவி ஜோதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன், கவுசல்யாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து கவுசல்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக பாக்கியராஜ், ஜோதியை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

போலீசார் விசாரணையில் பாக்கியராஜ் கூறியதாவது:-

எனது அண்ணன் குமார் வெளிநாட்டில் வசித்து வருகிறார். எனது திருமணத்துக்கு முன்பு இருந்தே எனக்கும் அண்ணன் மனைவி ஜோதிக்கும் தகாத உறவு இருந்தது. இந்த உறவு திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்தது. கவுசல்யா வீட்டில் இல்லாத நேரத்தில் நானும் ஜோதியும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருப்போம். இதை அவர் பார்த்துவிட்டதால் 3 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். உல்லாச உறவுக்கு தடையாக இருக்கும் கவுசல்யாவை பாக்கி நகை கேட்டு மாமனார் வீட்டுக்கு அடிக்கடி அழைத்துச் சென்று விட்டு வருவேன். இதனால் மன உளைச்சலில் இருந்த மனைவி கவுசல்யா கை, காலில் கத்தியால் அறுத்துக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டனர். இதேபோல ஜோதியும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைத்தார்.

Next Story