பெரியகோவிலில் நவீன விளக்குகளை பொருத்தி சோதனை: மின்னொளியில் ஜொலித்த கோபுரங்கள்
பெரியகோவிலில் நவீன விளக்குகளை பொருத்தி சோதனை செய்தபோது மின்னொளியில் கோபுரங்கள் ஜொலித்தன.
தஞ்சாவூர்,
மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவிலில் மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில் ஆகியவை உள்ளன. இது தவிர 216 அடி உயரமுள்ள விமான கோபுரமும் அமைந்துள்ளன.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் தஞ்சை பெரியகோவிலும் மின்னொளியில் ஜொலிப்பதற்காக நவீன மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நமது பாரம்பரிய நினைவுச்சின்னத்தை ஒளி வெள்ளத்தில் பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
மின்னொளியில் ஜொலித்த கோபுரங்கள்
பெரியகோவில் விமான கோபுரம், முகப்பு பகுதி, கோவில் திருச்சுற்று மண்டபம், ராஜராஜன் கோபுரம் பகுதியில் நவீன விளக்குகள் பொருத்தப்பட்டு மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. நேற்று கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரத்தை நோக்கி வைக்கப்பட்டிருந்த நவீன மின் விளக்குகளை தொழில்நுட்ப பணியாளர்கள் எரிய வைத்தனர்.
அப்போது மின்னொளி கோபுரத்தின் மீது முழுமையாக விழுகிறதா? அல்லது கோபுரத்தை தாண்டி செல்கிறதா? என சோதனை செய்து பார்த்தனர். நவீன மின் விளக்குகளால் கோபுரங்கள் ஜொலித்தன. இதை பார்த்த பக்தர்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோவும், போட்டோவும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த பணியை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு அதற்கேற்ற வகையில் பணி நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story