விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தஞ்சையில், தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து தஞ்சையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதனை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்கும் போது பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும் என்று தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் விழிப்புடன் கொண்டாடுவோம் விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி தஞ்சையில் நேற்று தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர்கள் திலகர், சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துண்டுபிரசுரம் வினியோகம்
இதில் தீயணைப்பு வீரர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், தீயணைப்பு வாகனம் ஆகியவற்றில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் தொடங்கி கீழராஜவீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மீண்டும் அலுவலகத்தை அடைந்தது.
ஊர்வலத்தின் போது தீயணைப்பு வீரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கினர். மேலும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், பாதுகாப்பாக வெடிகளை வெடிப்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
குளிர்ந்த நீர்
இது குறித்து மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா கூறுகையில், “தீயணைப்புத்துறை சார்பில் தீபாவளி பண்டிகை வரை தினமும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தீயணைப்பு நிலையங்கள் சார்பிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெடிகளை வெடிக்கும் போது எளிதில் தீப்பிடிக்கும் ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். குடிசை பகுதிகளில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது. வெடிகளை வெடிக்கும் போது மணல் மற்றும் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அதன்மீது வாழைப்பட்டை சாறு, பேனா மை இவைகள் பயன்படுத்துவதை தவிர்த்து குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும்”என்றார்.
Related Tags :
Next Story