வாணாபுரம், படவேடு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்


வாணாபுரம், படவேடு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 8 Nov 2020 1:22 PM GMT (Updated: 8 Nov 2020 1:22 PM GMT)

வாணாபுரம் மற்றும் படவேடு பகுதியில் ஆபத்தானநிலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் பகுதியில் இருந்து பேராயம்பட்டு செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஒரு வளைவு பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கம்புகளை கொண்டு மின்கம்பிகளை தூக்கி கட்டி வைத்துள்ளனர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

படவேடு

அதேபோன்று கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ராமநாதபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் மரக்கட்டைகளை நட்டு மின் கம்பிகளை சற்று உயரத்தில் செல்லுமாறு வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளை மாற்றி தரக்கோரி மின் வாரிய நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மின்வாரியத்தினர் கம்பம் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் மின்கம்பங்களை நட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story