காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
பென்னாகரம்,
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
பாதுகாப்பு பணி
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர்.
கர்நாடக மாநிலம் மாறுகொட்டாய் வழியாக ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அருவியை குடும்பத்துடன் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் போலீசார், தீயணைப்பு படையினர் காவிரி கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story