தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது


தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 8 Nov 2020 9:04 PM IST (Updated: 8 Nov 2020 9:04 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை,

நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே உள்ளதால் புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கோவை ஒப்பணக்காரவீதி, பெரியக்கடைவீதி, டவுன்ஹால், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். இருப்பினும் சிலர் முகக்கவசம் அணியாமல் வருவதோடு, பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடிப்பது இல்லை. இதை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்

கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோபுரங்களில் நின்றபடி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் கொரோனா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தவிர மாநகராட்சி சார்பில் நடமாடும் கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள் சுற்றி வருதோடு, கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி வருகின்றனர். இதனால் மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுகிறது.

ஜவுளிகடைகள், நகைகடைகளில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கடை ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா, கடைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அவர்கள் கண்காணிக்கின்றனர்.

Next Story