ஊட்டி நகராட்சிக்கு வரவேண்டிய வாடகை பாக்கியை நேரில் வசூலித்த ஆணையாளர்


ஊட்டி நகராட்சிக்கு வரவேண்டிய வாடகை பாக்கியை நேரில் வசூலித்த ஆணையாளர்
x
தினத்தந்தி 8 Nov 2020 4:35 PM GMT (Updated: 8 Nov 2020 4:35 PM GMT)

ஊட்டி நகராட்சிக்கு வரவேண்டிய வாடகை பாக்கியை ஆணையாளர் சரஸ்வதி நேரில் சென்று வசூல் செய்தார்.

ஊட்டி, 

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதுதவிர எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட இடங்களில் நகராட்சி வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வாடகை அடிப்படையில் கடைகளை எடுத்து வியாபாரிகள் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.2½ கோடி வருமானம் கிடைத்தது. கடந்த 2016-ம் ஆண்டு நகராட்சி ஆணையாளர் சர்தார் நகராட்சியில் அடிப்படை பணிகள் மற்றும் மேம்பாடுகளை செய்ய போதிய நிதி இல்லாததால் கடைகளை அளவீடு செய்து வாடகையை உயர்த்தினார்.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வாடகையும், வைப்பு தொகையாக ரூ.10 கோடியும் என ரூ.22 கோடி நகராட்சிக்கு வருமானம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் வியாபாரிகள் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்த இயலாது, வாடகையை குறைக்க வேண்டும் என்றும் பரிசீலனை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் பலர் வாடகை செலுத்தாமல் உள்ளனர். அதன் காரணமாக நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாமல் உள்ளது.

ரூ.4 கோடி வாடகை வசூல்

வணிக வளாகங்கள், நகராட்சி மார்க்கெட்டில் வாடகை கட்டணம் ரூ.11 கோடி பாக்கி இருந்தது. ஊரடங்கு உத்தரவால் முதல் 2 மாதங்கள் மார்க்கெட்டில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாடகை செலுத்த முடியாமல் இருந்தனர். தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. நிதி பற்றாக்குறையால் நகராட்சியில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து மார்க்கெட்டில் வாடகை கட்டணத்தை வசூலிக்க தனி குழு அமைக்கப்பட்டது. இதுவரை ரூ.4 கோடி வாடகை கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆணையாளர் நேரில் சென்று வசூல்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊட்டி நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியது இருப்பதால் நகராட்சி ஆணையர் கடையை வாடகை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இதையடுத்து வாடகையை வசூல் செய்ய தனிக்கழு அமைக்கப்பட்டது. மேலும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நேரில் சென்று கடை வாடகை வசூல் செய்தார்.

இதன் மூலம் நகராட்சி மார்க்கெட்டில் கடை வாடகை கட்டணம் ரூ.11 கோடி பாக்கியில் ரூ.4 கோடி வசூலிக்கப்பட்டது. இன்னும் ரூ.7 கோடி பாக்கி உள்ளது. தொடர்ந்து குழுவினர் வசூலித்து வருகின்றனர். அதேபோல் 36 வார்டுகளிலும் தண்ணீர் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் தீபாவளிக்கான முன்பணம் நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

Next Story