கழுகுமலை நகர பஞ்சாயத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிகாரிகளுக்கு உத்தரவு


கழுகுமலை நகர பஞ்சாயத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 9 Nov 2020 3:30 AM IST (Updated: 8 Nov 2020 10:38 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை நகர பஞ்சாயத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவிட்டார்.

கழுகுமலை,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில், சீரான குடிநீர் வழங்கல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர், நகர பஞ்சாயத்து பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீராகவும், பற்றாக்குறை இன்றியும் வழங்க வேண்டும். வல்லாரை வென்றான் கண்மாய் பகுதியில் கிணறு அமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்.

மின்சார வாரியத்தின் மூலம் குறைவான மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழுகுமலை 15-வது வார்டு மகாலட்சுமி நகர், நடுத்தெரு, ஆறுமுகம் நகர், ஏ.பி.சி. நகர், அண்ணா புது தெரு மற்றும் 6-வது வார்டு பாலசுப்பிரமணியம் தெரு, மேலத்தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் சாலை, பாபா நகர் ரோடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் சாலை மற்றும் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். மேலும் கழுகுமலையில் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில், உடனடியாக தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு கூட்டத்தில் குடிநீர் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் விக்னேஷ், கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் அன்னம், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story