மின்னல் தாக்கி சட்டசபை கட்டிடத்தில் சேதம் முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆய்வு
மின்னல் தாக்கியதில் சேதமடைந்த புதுவை சட்டசபை கட்டிடத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக பெரும்பாலும் நள்ளிரவில் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி நேற்று அதிகாலை வரை விடிய விடிய இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சிமோனல் வீதியில் உள்ள சட்டசபை இணைப்பு கட்டிடத்தின் 4-வது மாடியில் மின்னல் தாக்கியது. இதில் மொட்டை மாடியில் வைக்கப்பட்டு இருந்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் தடுப்புச் சுவர் உடைந்து சட்டசபை கமிட்டி அறை வரை நாலாபுறமும் சிதறி விழுந்தன.
மேலும் சட்டசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4க்கும் மேற்பட்ட அரசு கார்களின் கண்ணாடிகளும், பாகங்களும் உடைந்து சேதமடைந்தன. இதுபற்றி அங்கு பணியில் இருந்த காவலர்கள் சட்டசபை செயலர் முனுசாமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று காலை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டசபை செயலாளர் முனுசாமி ஆகியோர் மின்னல் தாக்கி சேதமடைந்த கட்டிட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்கும்படியும், அங்கு வைக்கப்பட்டு இருந்த இடிதாங்கி செயல்படாதது ஏன்? என்பது குறித்து ஆய்வு செய்து அதனை சரி செய்யவும் உத்தரவிட்டனர்.
சட்டசபை வளாகத்தில் பகல் நேரத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். அதிர்ஷ்டவசமாக நள்ளிரவில் பெய்த மழையின்போது மின்னல் தாக்கி கட்டிடம் சேதமடைந்ததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் போனது.
சட்டசபை கட்டிடம் சேதமடைந்தது குறித்து சபாநாயகர் சிவக்கொழுந்து கூறுகையில், ‘நள்ளிரவில் இடி, மின்னலுடன் மழை பெய்தபோது சட்டசபை கட்டிடத்தின் ஒரு பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கார்கள் சேதமடைந்து இருப்பது குறித்தும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடி தாங்கி செயல்படாமல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அதை சரி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story