திண்டுக்கல் அருகே கோவில் சுவரில் துளையிட்டு ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயற்சி


திண்டுக்கல் அருகே கோவில் சுவரில் துளையிட்டு ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 Nov 2020 1:07 AM GMT (Updated: 9 Nov 2020 1:07 AM GMT)

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் சுவரை துளையிட்டு, ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னிவாடி,

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவிலின் உபகோவில் ஆகும். இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமானது. இந்தகோவிலில் புரட்டாசி, மார்கழி மாதங்களில் விமரிசையாக திருவிழாக்கள் நடைபெறும். இந்த கோவிலில் அர்ச்சகராக ராஜா சுகுமார் உள்ளார்.

இந்த கோவிலின் மூல விக்கிரக சன்னதியில் ஐம்பொன்னால் ஆன பெருமாள், கமலவல்லி தாயார், ராமானுஜர் உற்சவர் சிலைகள் மற்றும் பழமையான கற்சிலைகள் உள்ளன. இதனையடுத்து கோவிலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுக்காக 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் மூலவர் சன்னதி அருகே அலாரம் ஒலிக்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி இரவு மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலின் பின்பக்க சுவரில் ஆள் நுழைந்து போகும் அளவிற்கு துளை போட்டனர். பின்னர் அவர்கள் அதன்வழியாக கோவிலுக்குள் புகுந்தனர்.

இதையடுத்து மர்மநபர்கள் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன பெருமாள், கமலவல்லி தாயார், ராமானுஜர் உற்சவர் சிலைகளை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவர்கள், தங்கள் முகம் தெரியாமல் இருப்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை குச்சி மூலம் மேலே தூக்கிவிட்டு உள்ளனர்.

பின்னர் அவர்கள், சிலைகளை கொள்ளையடிப்பதற்காக சுவாமி சன்னதிக்கு அருகேயுள்ள ஜன்னலின் ஒரு பகுதி கதவை உடைத்து அதன் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் அதன் வழியாக உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து திருடர்கள் ஏமாற்றம் அடைந்து சிலைகளை கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.

இந்தநிலையில் மறுநாள் வெள்ளிக்கிழமை அர்ச்சகர் மற்றும் ஊழியர்கள் கோவிலை சுற்றி பார்த்தனர். அப்போது ஜன்னல் கதவு உடைந்து இருந்தது. மழை பெய்ததால் ஜன்னல் கதவு உடைந்திருக்கலாம் என கருதி அவர்கள் ஜன்னல் கதவை மட்டும் பழுது பார்த்து உள்ளனர். இதனிடையே பிற்பகல் 3 மணியளவில், அருகே உள்ள தோட்டத்துகாரரான முருகன் என்பவர், கோவில் சுவரில் துளை போடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அர்ச்சகரிடம் கூறினார். இதையடுத்து அர்ச்சகரும், கோவில் நிர்வாகிகளும் சுவரில் துளை போடப்பட்டிருப்பதை நேரில் சென்று பார்த்தனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் கணபதி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். மேலும் இதுபற்றி ரெட்டியார்சத்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த கோவிலில் இரவு காவலாளியாக குளத்துபட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த 11 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது முக்காடு போட்ட நிலையில் ஒரு மர்மநபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் இந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் 4-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய ஐம்பொன்னால் ஆன சிலைகள் விலை மதிக்கமுடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story