தடையை மீறி 2-வது கட்ட பயணம் திருவொற்றியூரில் வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜ.க.வினர் கைது - செங்கல்பட்டில் இன்று தொடக்கம்
சென்னை திருவொற்றியூரில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை விடுவித்தனர்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. சார்பில் ‘வெற்றிவேல் யாத்திரை’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் கடந்த 6-ந்தேதி திருத்தணியில் தடையை மீறி கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வினர் யாத்திரையை தொடங்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர்.
இந்தநிலையில் ‘வேல் தொடர்ந்து துள்ளி வரும். திட்டமிட்டபடி எல்லா இடங்களிலும் யாத்திரை நடைபெறும். யாத்திரையின் 2-வது நாள் பயணம் 8-ந்தேதி (நேற்று) சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து தொடங்கும்’ என்று எல்.முருகன் அறிவித்தார்.
சென்னை கோயம்பேடு இல்லத்தில் இருந்து எல்.முருகன் தலைமையில் முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, அண்ணாமலை, ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் வாகனங்களில் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டனர். 8 வாகனங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர். எல்.முருகன் காவி நிற சட்டை, பச்சை நிற வேஷ்டி அணிந்திருந்தார். நெற்றியில் விபூதி பட்டை அணிந்தபடி கையில் வேல் ஏந்தி இருந்தார்.
திருவொற்றியூர் தேரடி சன்னதிக்கு மதியம் 12.30 மணியளவில் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வந்தனர். அவர்களை யாத்திரை பொறுப்பாளர் நரேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் வி.எஸ்.ஜே.சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் இரா.பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் எல்.முருகன் உள்ளிட்டோர் வடிவுடையம்மன் கோவில் முன்பு சாமி தரிசனம் செய்தனர். அப்போது எல்.முருகன் கொண்டு வந்திருந்த வேல் பூஜிக்கப்பட்டது.
சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த எல்.முருகன் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்று பா.ஜ.க.வினர் மத்தியில் பேசினார். இதைத்தொடர்ந்து எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வினர் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கைது செய்யப்பட்ட எல்.முருகன் உள்பட அனைவரும் மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே யாத்திரையில் பங்கேற்ற 2,000 பேர் மீது அனுமதி இன்றி கூட்டம் கூடியதாக 3 பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் எல்.முருகன் 3-வது நாள் பயணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) தடையை மீறி வேல்யாத்திரை மேற்கொள்கிறார்.
பா.ஜ.க.வினரின் வேல் யாத்திரையையொட்டி திருவொற்றியூர் பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் இணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர், மகேஸ்வரி, துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா உள்பட போலீஸ் அதிகாரிகளும், 300-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எல்.முருகன் வீட்டில் இருந்து வந்த வழி முழுவதும் ஆங்காங்கே பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
யாத்திரையின் முதல் நாள் நிகழ்வில் நான் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு தவறான முடிவை எடுத்திருக்கிறது.
இந்த முடிவை எடுத்திருக்க கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த யாத்திரை திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story