தீபாவளிக்கு பொருட்கள் வாங்க பெரம்பலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்


தீபாவளிக்கு பொருட்கள் வாங்க பெரம்பலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 9 Nov 2020 10:01 AM IST (Updated: 9 Nov 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்,

தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக கிராமங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் உற்பத்தி பாதித்ததால் வரத்து குறைவால் துணிமணிகள் மற்றும் மற்ற பொருட்களின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. முன்பெல்லாம் அதிகம் காணப்படும் பட்டாசு கடைகள் கொரோனாவினால் இந்த ஆண்டு குறைந்த அளவே காணப்படுகிறது. பட்டாசுகளின் விலையும் உயர்ந்துள்ளது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென இனிப்பு கடைகள் ஆரம்பிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடைகளாக ஜவுளிகடைகள் ஏராளமான ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது. நேற்று பகல் நேரத்தில் திடீர் திடீரென பெய்த மழையினால் தரைக்கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.


Next Story