பணியின்போது மரணம் அடைந்த ராணுவவீரர் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி - அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது


பணியின்போது மரணம் அடைந்த ராணுவவீரர் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி - அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 9 Nov 2020 11:06 AM IST (Updated: 9 Nov 2020 11:06 AM IST)
t-max-icont-min-icon

பணியின்போது இறந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு, மாவுதலைசாமி கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கணபதி, முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மகன் பிரித்திவிராஜா (வயது21). இவர் கடந்த 2 ஆண்டுகளாக ராணுவவீரராக பணிபுரிந்து வந்தார். லடாக் பகுதியில் பணியில் இருந்த இவர் கடந்த 5-ந் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார்.

பிரித்திவிராஜாவின் உடல் தனிவிமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு மாலை 5 மணி அளவில் ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரித்திவிராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பிரித்திவிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், திருப்பத்தூர் தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story