தூத்துக்குடியில் குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்திய ரோந்து வாகனம்


தூத்துக்குடியில் குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்திய ரோந்து வாகனம்
x
தினத்தந்தி 9 Nov 2020 6:05 PM GMT (Updated: 9 Nov 2020 6:05 PM GMT)

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்திய ரோந்து வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிப்பதற்கு 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் வகையிலும் நான்கு புறமும், கண்காணிக்கக்கூடிய வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்திய 2 ரோந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தொடக்க நிகழ்ச்சி

இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கண்காணிப்பு கோபுரம், மற்றும் ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், பண்டிகை காலங்களில் குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கோபுரம் மற்றும் ரோந்து வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் போலீஸ்காரர் ஒருவர் அமர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். இந்த வாகனம் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜெயப்பிரகாஷ் (மத்தியபாகம்), மயிலேறும் பெருமாள் (போக்குவரத்து), போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story