முதல்-அமைச்சர் நாளை தூத்துக்குடி வருகை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தூத்துக்குடி வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி,
கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.15 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறார்.
நாளை (புதன்கிழமை) காலையில் நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர் ஆய்வு
முதல்-அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் நேற்று முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் வளர்ச்சி திட்டங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று முதல்-அமைச்சர் ஆய்வு செய்து உள்ளார். முதல்-அமைச்சர் சில காரணங்களால் ஏற்கனவே தூத்துக்குடிக்கு வர முடியாமல் போனது. அதையும் சில தலைவர்கள் அரசியல் ஆக்கி பார்த்தார்கள்.
தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்திலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கிற, பொருந்தக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாட்டில் முதல்-அமைச்சருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் ஆய்வு கூட்டத்தை முடித்து விட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்ட ஆய்வுக்கூடத்திற்கு செல்கிறார். அவ்வாறு செல்லும் வழியில் குறுக்குச்சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் தலைமையிலும், எட்டயபுரத்தில் சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையிலும், கோவில்பட்டி நகரில் என்னுடைய தலைமையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில்பட்டி
முன்னதாக முதல்-அமைச்சர் வருகை குறித்தும், வரவேற்பு கொடுப்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி பேசி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சின்னப்பன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் ரத்தினம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் சுப்புராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story