நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 24 மடங்கு உயர்வு டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 24 மடங்கு உயர்வு டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Nov 2020 8:02 PM GMT (Updated: 9 Nov 2020 8:02 PM GMT)

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 24 மடங்கு உயர்ந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு, 

பா.ஜனதாவின் உள்விவகாரங்கள் குறித்து நான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் மட்டுமே பேசுவோம். எங்கள் கட்சியின் பிற நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன். அக்கட்சியின் தனிப்பட்ட விஷயங்களில் நாங்கள் மூக்கை நுழைக்க மாட்டோம். அவர்களின் பிரச்சினையை அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும். நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

மத்தியில் 2-வது முறையாக பா.ஜனதா அரசு அமைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது வேலையில்லா திண்டாட்டம் 24 மடங்கு உயர்ந்துவிட்டது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை குறைப்பதற்கு பதிலாக அவற்றின் விலையை தினந்தோறும் உயர்த்தி வருகிறது.

கண்துடைப்பு நாடகம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது. ஆட்சியில் இருப்பவர்களில் யாருக்கும் அனுபவம் இல்லாததால் நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கு காலத்தில் தேவையான உதவிகளை செய்யவில்லை. குறு, சிறு தொழில்களுக்கும் உதவி செய்யவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தவில்லை.

எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை குறைத்துவிட்டனர். கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்றம் அடைய செய்யும் திட்டத்தையும் சரியான முறையில் செயல்படுத்தவில்லை. கொரோனா வைரசை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. இது உலக அளவிலான பிரச்சினை என்பதால் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். கொரோனாவை நிர்வகிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு போதிய ஞானம் இல்லை. ஒவ்வொரு நிலையிலும் கண்துடைப்பு நாடகத்தை இந்த அரசு நடத்துகிறது.

மக்களின் வயிறு நிரம்பாது

பா.ஜனதாவுக்கு வளர்ச்சி சித்தாந்தம் இல்லை. பழிவாங்கும் அரசியலை மட்டுமே பா.ஜனதா செய்து வருகிறது. கொரோனா காலத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா நிதி உதவி திட்டத்தை அறிவித்தார். அதில் யாருக்காவது இந்த அரசு ஒரு ரூபாயாவது கொடுத்துள்ளதா?. அதுபற்றிய விவரங்களை இந்த அரசு வெளியிட வேண்டும். மக்களின் பிரச்சினைகள் இந்த அரசுக்கு தெரியவில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நல்ல முறையில் அனுப்பி இருந்தால், அவர்கள் திரும்ப வந்திருப்பார்கள். ஆனால் அவர்களை அவமானப்படுத்தி இந்த அரசு அனுப்பியுள்ளது. அதனால் அவர்கள் மீண்டும் கர்நாடகம் வர மாட்டார்கள்.

கைகளை தட்டினால் ஏழை மக்களின் வயிறு நிரம்பாது. மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிதி உதவி திட்டத்தின் பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. கடன் வசூல் மற்றும் மக்களுக்கு வங்கிகள் கொடுக்கும் தொல்லைகள் நிற்கவில்லை. ஆட்சி நிர்வாகத்தை நடத்த பா.ஜனதாவினருக்கு தெரியவில்லை. இயற்கை உருவாக்கிய பிரச்சினைகளை விட அரசு செயற்கையாக ஏற்படுத்திய சிக்கல்களே அதிகம். கல்வித்துறை முடங்கிவிட்டது. 60 ஆண்டுகால முன்னேற்றத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே பா.ஜனதாவின் நோக்கம். மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவர்களின் எண்ணம் அல்ல.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story