போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு காங்கிரஸ் முன்னாள் மந்திரியின் மகன் கைது காவலில் எடுத்து போலீஸ் விசாரணை


போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு காங்கிரஸ் முன்னாள் மந்திரியின் மகன் கைது காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2020 1:40 AM IST (Updated: 10 Nov 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காங்கிரஸ் முன்னாள் மந்திரியின் மகனை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இதற்கிடையில், பெங்களூருவுக்கு வெளிநாடுகளில் இருந்து தபால் மற்றும் கூரியர் பார்சல்கள் மூலமாக போதைப்பொருட்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது டார்க்நெட் என்ற இணையதளம் மூலமாக வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் விற்கும் கும்பலிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்று வந்தது தெரியவந்தது. இந்த கும்பலை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கோவாவில் கைது

அதன்படி, கடந்த 4-ந் தேதி கே.ஜி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாம்ராஜ்பேட்டையில் வசிக்கும் சுஜய் என்பவருக்கு பார்சல் மூலமாக வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வந்திருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அன்றைய தினம் பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க முயன்ற சுஜய் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 500 கிராம் ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சுஜய்க்கு போதைப்பொருட்கள் விற்கும் பல்வேறு விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

அந்த விற்பனையாளர்கள் பற்றிய தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. அவர்களில் 2 விற்பனையாளர்கள் கோவாவில் பதுங்கி இருப்பது பற்றியும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீசார் கோவாவுக்கு விரைந்து சென்றனர். கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்த போதைப்பொருள் விற்பனையாளர்களான ஹேமந்த் மற்றும் சுனேஷ் ஆகிய 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள்.

முன்னாள் மந்திரியின் மகன்

இந்த நிலையில், ஹேமந்த், சுனேசுடன், முன்னாள் மந்திரியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ருத்ரப்பா லமானியின் மகனான தர்ஷன் லமானியும் ஓட்டலில் இருந்துள்ளார். இதனால் அவரும் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து, 3 பேரையும் பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு தர்ஷன் லமானி அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பது பற்றிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து, முன்னாள் மந்திரி ருத்ரப்பா லமானியின் மகன் தர்ஷன் லமானியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கைதான ஹேமந்த், சுனேஷ், தர்ஷன் லமானி ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியின் மகன் கைதான சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விற்பனையாளர்களுக்கு அடைக்கலம்

இதற்கிடையில், போதைப்பொருள் விற்பனையாளர்கள் 2 பேருக்கும் தர்ஷன் லமானி அடைக்கலம் கொடுத்திருப்பது உறுதியாகி இருப்பதாகவும், கடந்த சில நாட்களில் கோவாவில் வைத்து 2 போதைப்பொருள் விற்பனையாளர்களையும் 3 தங்கும் விடுதிகளுக்கு மாற்றுவதற்கு தேவையான உதவிகளை தர்ஷன் லமானி செய்து கொடுத்திருப்பதாகவும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா?, போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தனது மகனுக்கும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும் முன்னாள் மந்திரி ருத்ரப்பா லமானி தெரிவித்துள்ளார். 

Next Story