பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் 302 இடங்களில் நடந்தது


பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் 302 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 10 Nov 2020 4:55 AM IST (Updated: 10 Nov 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து 302 இடங்களில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.

நெல்லை, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஊரடங்கில் பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் அளித்தாலும், பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக வருகிற 16-ந்தேதியில் இருந்து பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

302 இடங்களில்...

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள மொத்தம் 302 பள்ளிகளிலும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்க முக கவசம் அணிந்து வந்த பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த கருத்து கேட்பு படிவம் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், மாணவரின் பெயர், பெற்றோரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டு, பள்ளிகளை திறப்பதற்கு சம்மதமா? இல்லையா? என்பது குறித்து ஆம் அல்லது இல்லை என்று ‘டிக்’ செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த படிவத்தை நிரப்பி, அங்குள்ள பெட்டியில் பெற்றோர்கள் செலுத்தினர். சில தனியார் பள்ளிக்கூடங்களில் இணையதளம் வழியாகவும், ‘ஜூம்’ செயலி மூலமாகவும் பெற்றோர்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.

மீண்டும் திறக்க வேண்டும்

பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், சிலர் பள்ளிக்கூடங்களை திறக்காமல் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். பெற்றோர்களின் கருத்துகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் நடந்த கருத்து கேட்பு முகாமில் பங்கேற்ற பெற்றோர்கள் கூறியதாவது:-

செலவிட முடியாது

சங்கரன்கோவில் சுண்டங்குறிச்சி சகுந்தலா:- இங்கு என்னுடைய மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவ-மாணவிகளுக்கு படிப்பே மறந்து விடும் நிலை உள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் இணையதள வகுப்புக்காக செல்போன் வாங்க செலவிட முடியாது. எனவே பள்ளி களை உடனே திறக்க வேண்டும்.

சங்கரன்கோவில் வள்ளித்தாய்:- இணையதளம் வழியாக கல்வி பயிற்றுவிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் போதி ய இணையதள இணைப்பு கிடைக்காததால் மாணவர்கள் கல்வி பயில முடியவில்லை. எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.

கற்கும் திறன் குறையும்

வன்னிக்கோனேந்தல் மூவிருந்தாளி கலா:- பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்து விடும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் உடல்நலனில் போதிய அக்கறை செலுத்த ஏற்பாடு செய்து விட்டு, பள்ளிகளை மீண்டும் திறக்கலாம்.

நெல்லை டவுன் காசி முத்துராமலிங்கம்:- ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், விரைவில் சமூக பரவலாக மாறி விடும். எனவே கொரோனா தொற்று முற்றிலும் நீங்கும் வரையிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும்.

Next Story