தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவத்தினர் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவத்தினர் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்.
தஞ்சை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் 70 பேர் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இரவு பணியில் போலீசாருடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து முன்னாள் ராணுவத்தினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில் செயலாளர் மனோகரன், துணைத்தலைவர் பாலு, பொருளாளர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டியிட்டு, தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆறு மாத காலமாக கடந்த மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்கக்கோரி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர், டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் மன வருத்தத்தோடு வருகிற 16-ந்தேதி முதல் ராஜினாமா செய்கிறோம் என அதில் குறிப்பிட்டு இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
இதே போல் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தஞ்சை மாவட்ட தோகூர் மற்றும் நாஞ்சிக்கோட்டை கைமுறை காகித அலகு தொழிலாளர்கள் நல்லையன் தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக வந்தனர். அவர்கள் இங்கு பணியாற்றிய 35 தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவைத்தொகை கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமான காலிமனையை ஜப்தி செய்து பொது ஏலம் விட்டு தொகையை தொழிலாளர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதில் தாசில்தார் நடவடிக்கை எடுக்காததால் 35 தொழிலாளர்கள் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே தாசில்தார் நீதிமன்ற உத்தரவு படி இடத்தை ஜப்தி செய்து ஏலம் விட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story