பெரம்பலூர் அருகே 4 இடங்களில் கோழிப்பண்ணைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் வெங்காயம் பறிமுதல் - திருச்சி வியாபாரிகளை கைது செய்ய போலீசார் முடிவு
பெரம்பலூர் அருகே 4 இடங்களில் கோழிப்பண்ணைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் வெங்காயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்திருந்த திருச்சி வியாபாரிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாடாலூர்,
நாடு முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வெங்காயத்தின் விலை மேலும் உயரக் கூடும் என்பதால் திருச்சியை சேர்ந்தவெங்காய மொத்த வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து, வெங்காயத்தை கொண்டு வந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்தினர். இது குறித்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் அங்கு சென்று ஆய்வு செய்த, பெரம்பலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் வெங்காயம் பதுக்கி வைத்திருப்பது குறித்த தகவலை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவுக்கு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்ட வெங்காயத்தை பறிமுதல் செய்ய கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருச்சி உட்கோட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லுசாமி தலைமையிலான போலீசார் நேற்று காலை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் முத்துச்செல்வம் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 100 டன் வெங்காயமும், கூத்தனூர் சாலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 71 டன்னும், பெரம்பலூர் தாலுகா சத்திரமனை கிராமத்தில் அழகேசன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 202 டன்னும், சத்திரமனை கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 110 டன்னும் என மொத்தம் 483 டன் பெரிய வெங்காயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த வெங்காயங்கள் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றில் பயன்பாட்டுக்கு உகந்த வெங்காயங்கள் கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், திருச்சியை சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள் 3 பேர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் குறைவான விலைக்கு விற்றபோது அதனை வாங்கி, அவற்றை இங்குள்ள கோழிப்பண்ணைகளில் பதுக்கி வைத்திருந்ததும், தீபாவளி பண்டிகை காலத்தில் விலை அதிகமாக உயரும்போது, இந்த வெங்காயத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது, என்றனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி வரும் குடிமை பொருள் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு பிரிவின் கீழ் திருச்சி வெங்காய வியாபாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story