திருச்செங்கோட்டில் துணிகரம்: நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் வெள்ளி பொருட்கள் திருட்டு - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


திருச்செங்கோட்டில் துணிகரம்: நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் வெள்ளி பொருட்கள் திருட்டு - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Nov 2020 4:00 AM IST (Updated: 10 Nov 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் நகைக்கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

எலச்சிபாளையம்,

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா வடுகப்பட்டி வைகுந்தம் சாலையில் வசித்து வருபவர் முத்துச்சாமி (வயது 40). இவர் திருச்செங்கோடு பாவடி தெருவில் உள்ள காம்ப்ளக்சில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நகைக்கடை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கடையில் நகைகள் விற்பனை, நகை அடமானம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி இரவு கடையில் உள்ள தங்க நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்றார். மீதம் இருந்த சுமார் 5 கிலோ வெள்ளி பொருட்களான கொலுசு, டம்ளர், குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, செம்பு, தட்டு, கிண்ணம், மோதிரம், செயின், தோடு மற்றும் அரண்கொடி என மொத்தம் சுமார் ரூ.2 லட்சம் வெள்ளி பொருட்களை கடையில் வைத்து சட்டரை பூட்டி விட்டு அவர் சென்றிருந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருச்செங்கோட்டில் வசிக்கும் முத்துச்சாமியின் நண்பரான பிரபு என்பவர், அவருக்கு போன் செய்து உங்கள் கடை திறந்து உள்ளது என்று கூறினார். உடனே நண்பரை அங்கேயே இருக்குமாறு முத்துச்சாமி போனில் கூறினார். இதனிடையே பிரபுவை கண்டதும், கடையில் நின்று கொண்டிருந்த 3 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

அதன்பிறகு முத்துச்சாமி கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அங்கு கடையின் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், கடையில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து, நகைக்கடை பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.

இந்த சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story