ராணிப்பேட்டையில் தடையைமீறி பா.ஜ.க. பொதுக்கூட்டம்: பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது


ராணிப்பேட்டையில் தடையைமீறி பா.ஜ.க. பொதுக்கூட்டம்: பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2020 4:00 AM IST (Updated: 10 Nov 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் தடையை மீறி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

பா.ஜ.க.வின் வேல்யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் முத்துக்கடை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் செங்கல்பட்டில் நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ராணிப்பேட்டையில் மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் தடையைமீறி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்தியமந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “வேல் யாத்திரை, யாருக்கும் எதிரானது அல்ல. வேல் யாத்திரையில் கலந்து கொண்ட, மாநிலத் தலைவர் முருகன் முதல் நாள் கைது செய்யப்பட்டார். பின்னர் தொடர்ந்து இன்று நான்காவது நாளாக கைது செய்யப்பட்டிருக்கிறார். வேல் யாத்திரைக்கு இந்த அரசு தடை செய்துள்ளது. இன்று பேசுவதற்கு கூட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். நாளை முதலாவது பேசுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

கூட்டத்தில் மாநில அணிகளின் நிர்வாகிகள் பாபாஸ் பாபு, போளூர் ஏழுமலை, பிரேமா மாலதி, ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், தேசிய செயற்குழு உறுப்பினர் தணிகாசலம், முன்னாள் மாநில பிரசார பிரிவு செயலாளர் சீனிவாசன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அமுதபாண்டியன், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தடையை மீறி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் 70 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் வேலூரில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், பொது செயலாளர்கள் ஆர்.ஜெ.பாஸ்கர், பாபு உள்பட 350-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இந்த பொதுக்கூட்டத்தையொட்டி மண்டி வீதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story