திண்டுக்கல் அருகே, ஊராட்சி மன்ற தலைவி தூக்குப்போட்டு தற்கொலை - பதவியை ராஜினாமா செய்ய கணவர் வற்புறுத்தியதால் விபரீதம்


திண்டுக்கல் அருகே, ஊராட்சி மன்ற தலைவி தூக்குப்போட்டு தற்கொலை - பதவியை ராஜினாமா செய்ய கணவர் வற்புறுத்தியதால் விபரீதம்
x
தினத்தந்தி 10 Nov 2020 10:30 AM IST (Updated: 10 Nov 2020 10:14 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே பதவியை ராஜினாமா செய்ய கணவர் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த ஊராட்சி மன்ற தலைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தாடிக்கொம்பு,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி இந்திரா (வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்திரா, கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஊராட்சி தலைவியாக பணியாற்றி வந்தார்.

பிரவீன்குமார், தாடிக்கொம்புவை அடுத்த சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதனால் அவர்கள் 2 பேரும், தங்களது மகன்களுடன் சென்னமநாயக்கன்பட்டியை அடுத்த சண்முகபுரத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்திரா மட்டும் சத்திரப்பட்டிக்கு தினசரி சென்று ஊராட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் சென்னமநாயக்கன்பட்டியில் இருந்து சத்திரப்பட்டிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இதனால் அவரால் அங்கு சென்று வருவதில் சிரமம் இருந்தது. இருப்பினும் அவர் சத்திரப்பட்டிக்கு சென்று ஊராட்சி பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியிடம், சத்திரப்பட்டிக்கு சென்று வருவதில் சிரமம் இருக்கிறது என்றும், மேலும் தொழிற்சாலையை ஒரே ஆளாக என்னால் கவனிப்பதிலும் சிக்கல் உள்ளது என்றும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் 2 பேரும் பேச்சுவார்த்தை இன்றி இருந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இந்திரா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

இந்தநிலையில் நேற்று காலை பிரவீன்குமார் தனது மகன்களை அழைத்துக்கொண்டு, பள்ளியில் கட்டணம் செலுத்துவதற்காக சென்றார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. அப்போது இந்திரா தனது வீட்டின் உள்பக்க அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிக்கு சென்றுவிட்டு வந்த பிரவீன்குமார், தனது மகன்களை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தொழிற்சாலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிற்கு சென்ற மகன்கள், தனது தாய் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அழுதவாறு உறவினர்களிடம் தெரிவித்தனர்.

உடனே உறவினர்கள், தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதால் ஊராட்சி மன்ற தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story