எடப்பாடி பழனிசாமி இன்று குமரி வருகை ரூ.268½ கோடி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்


எடப்பாடி பழனிசாமி இன்று குமரி வருகை ரூ.268½ கோடி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 10 Nov 2020 12:00 PM IST (Updated: 10 Nov 2020 12:02 PM IST)
t-max-icont-min-icon

குமரிக்கு இன்று வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.268½ கோடி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதேபோல் இன்று (செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதற்காக இன்று அவர் காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக குமரி மாவட்டம் வரும் அவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

* கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

* அரசு சார்பில் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிடுகிறார்.

*குமரி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, நில அளவைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.153.92 கோடி மதிப்பில் 21 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.60.44 கோடி மதிப்பில் 36 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

* பல்வேறு துறைகள் சார்பில் ரூ.54.22 கோடி மதிப்பில் 2,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு விழா மேடையில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

* கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அதிகாரிகளிடம் கலந்துரையாடுகிறார்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழு பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.

* நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, ஓய்வெடுக்கிறார்.

* நாளை (புதன்கிழமை) காலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் அரவிந்த், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

Next Story