சங்கராபுரம் அருகே கார் டிரைவர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


சங்கராபுரம் அருகே கார் டிரைவர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Nov 2020 10:59 PM IST (Updated: 10 Nov 2020 10:59 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே கார் டிரைவர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுஅனீப் மகன் ஜாபர்அலி (வயது 46). வெளிநாட்டில் கார் டிரைவராக வேலைபார்த்து வந்த இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். திருமணமான ஜாபர்அலிக்கு மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் ஜாபர்அலி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கடந்த 31-ந்தேதி கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வருவதற்காக கடந்த 4-ந் தேதி நெல்லிக்குப்பத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு 4 நாட்கள் தங்கிய ஜாபர் அலி 8-ந்தேதி மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மூரார்பாளையத்துக்கு வந்தார்.

22 பவுன் நகைகள் மாயம்

அங்கு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்த ஜாபர்அலி அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த துணிகள் கலைந்து காணப்பட்டது. அதில் இருந்த 2 வைரத்தோடு உள்ளிட்ட 22 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டின் பூட்டு, கதவு, ஜன்னல் எதுவும் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மாயமானது பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் ஜாபர்அலி புகார் கொடுத்தார். அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி தலைமையில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ஆகியோர் நகைகள் மாயமான வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

தொலைந்துபோன சாவிக்கொத்து

விசாரணையில் ஜாபர் அலி அவரது வீட்டின் சாவிக் கொத்தை கடந்த மாதம் தொலைத்துவிட்டார். இதையடுத்து கையில் வைத்திருந்த மாற்று சாவிக்கொத்தை அவர் பயன்படுத்தி வந்ததார். இதனால் தொலைந்து போன சாவிக்கொத்து யாராவது மர்ம நபர்களின்கையில் சிக்கி இருக்கலாம் என்றும், அதை வைத்து ஜாபர் அலி வீட்டில் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் அவரது வீட்டை திறந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த நகைகள் மாயமான சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story