ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவது போல் ஏமாற்றிய வாலிபர் சிக்கினார் பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கையும் களவுமாக சிக்கினார். அவரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் பாகருசேன் வீதியைச் சேர்ந்தவர் தீபா. இவரது மகன் விஸ்வா கடந்த 2-ந் தேதி பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வங்கியின் பிரதான ஏ.டி.எம்.மையத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு மர்ம நபர் பணம் எடுத்து தருவதாக கூறி கார்டை வாங்கினார்.
பின்னர் உங்களது கணக்கில் பணம் இல்லை என கூறிவிட்டு விஸ்வா வைத்திருந்த கார்டை, தான் வைத்துக்கொண்டு வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். இதன் பின்னர் தீபாவின் செல்போனுக்கு அவரது வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இது குறித்து தீபா வங்கியிலும், பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து தீபாவின் வங்கி ஏ.டி.எம் கார்டின் சேவை துண்டிக்கப்பட்டது.
அடி-உதை
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அந்த மர்ம நபர் பணம் எடுக்க முயற்சிப்பதாக தீபாவின் செல்போனிற்கு எஸ்.எம்.எஸ். வந்தது. உடனடியாக தீபா தனது மகன் விஸ்வாவை அழைத்து கொண்டு சம்பந்தப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்று தேடிப்பார்த்தபோது பேரணாம்பட்டு திரு.வி.க. நகரிலுள்ள ஏ.டி.எம். மையத்தில் அந்த மர்ம நபர் இருந்ததை விஸ்வா அடையாளம் காட்டினார். உடனடியாக தீபா பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்ம நபரை பிடித்தார்.
அவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வடச்சேரி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (26) என்பதும் இவருடன் பெண் உள்பட ஒரு கும்பலே இது போன்று நூதன மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
மேலும் பலரிடம் மோசடி
இதேபோல் பேரணாம்பட்டு பகுதியில் குண்டலபல்லி கிராமத்தைச் சேர்ந்த இளவரசி ஏ.டி.எம்.கார்டில் ரூ.18 ஆயிரம், அரவட்லா மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் ஏ.டி.எம். கார்டில் ரூ.8 ஆயிரம், பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதியின் மனைவி மாதுளம் வங்கி கணக்கிலிருந்து ரூ.17 ஆயிரம் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிகளில் ராஜ்குமாருக்கு தொடர்பிருக்கலாம் என தெரிகிறது. இதனை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story