ஹனூர் டவுனில் 96 மஞ்சள் மூட்டைகளை திருடிய 2 பேர் கைது தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு


ஹனூர் டவுனில் 96 மஞ்சள் மூட்டைகளை திருடிய 2 பேர் கைது தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Nov 2020 12:14 AM IST (Updated: 11 Nov 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஹனூர் டவுனில் மஞ்சள் தொழிற்சாலை குடோனுக்குள் புகுந்து 96 மஞ்சள் மூட்டைகளை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 96 மஞ்சள் மூட்டைகளும், லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தப்பி ஓடிய ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொள்ளேகால், 

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் டவுனில் யுவராஜா என்பவருக்கு சொந்தமான மஞ்சள் தொழிற்சாலை உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள் தொழிற்சாலை குடோனுக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். 96-க்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் திருடு போகி இருந்தது. இதுகுறித்த அந்த தொழிற்சாலை ஊரிமையாளர் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஹனூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சள் மூட்டைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் மஞ்சள் மூட்டைகளை திருடியவர்கள் ஹனூர் தாலுகா எடக்கதொட்டி கிராமம் ஹலகுமொலே பகுதியில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சோதனை நடத்தினர். போலீசார் வருவதை கண்டதும் 3 பேர் தப்பியோடினர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடிவிட்டார்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களை பி.ஜி.பாளையா கிராமத்தைச் சேர்ந்த சந்திரப்பா(வயது 34), காஞ்சள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(20) ஆகிய 2 பேர் என்பதும், சம்பவதன்று இவர்கள் தங்களது கூட்டாளி ராஜேசுடன் சேர்ந்து மஞ்சள் தொழிற்சாலை குடோனுக்குள் புகுந்து மஞ்சள் மூட்டைகளை திருடியதும் தெரியவந்தது.

மீட்பு

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 96 மஞ்சள் மூட்டைகள் மீட்கப்பட்டது. மேலும் மஞ்சள் மூட்டைகளை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர தப்பியோடிய ராஜேசை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story