சாகர் தாலுகாவில் சம்பவம் 36 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற 5 பேர் கைது
சாகர் தாலுகாவில் 36 குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா லியவிகெரே அருகே நேத்ரஹள்ளி ரோட்டில் 36 குரங்குகள் செத்துக்கிடந்தன. அந்த குரங்குகளின் உடல்களை சிலர் ஒரு கார் மற்றும் சரக்கு வேனில் இருந்து சாலைகளில் வீசினர். இதுபற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று செத்துக்கிடந்த குரங்குகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார் மற்றும் சரக்கு வேனில் இருந்த 5 பேரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையின் முடிவில் 36 குரங்குகளும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் செத்தது தெரியவந்தது. இதையடுத்து குரங்குகளின் உடல்களை சாலையில் வீசிய 5 பேரிடமும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லியவிகெரே பகுதியைச் சேர்ந்த அபிஷேக், லம்புதர், தியாகர்த்தி தஸ்தகீர், விஸ்வநாத் மற்றும் தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் என்பதும், அவர்கள் 5 பேரும் சேர்ந்து குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று உடல்களை சரக்கு வேன் மற்றும் காரில் ஏற்றி வந்து லியவிகெரே அருகே சாலையில் வீசியதும் தெரியவந்தது.
பரபரப்பு
இதையடுத்து அபிஷேக் உள்பட 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுபற்றி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எதற்காக அவர்கள் விஷம் வைத்து குரங்குகளை கொன்றனர் என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story