கொரோனா விதிகளை மீறிய பா.ஜனதாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி., நடிகர் தர்ஷனுக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறிய பா.ஜனதாவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி., நடிகர் தர்ஷன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக ஐகோர்ட்டில், மாநில அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவல் தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேபோல் கர்நாடகத்திலும் ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கு முழுமையாக அகற்றப்பட்டதுபோல் உள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும், மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேஜஸ்வி சூர்யா எம்.பி.
இதுதவிர முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு சுகாதார துறையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், மார்ஷல்கள் என பலரும் அபராதம் விதித்து வசூலித்து வருகிறார்கள். தற்போது பெங்களூருவில் முக கவசம் அணியாதவர்கள், முக கவசத்தை அரசு அறிவுறுத்தி உள்ளபடி சரியான முறையில் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் ஆகியோருக்கு தலா ரூ.250 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மக்கள் பிரதிநிதிகளும், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் சிலரும் கொரோனா விதிகளை மீறி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா இளைஞர் அணி தேசிய தலைவராக தேஜஸ்வி சூர்யா எம்.பி. நியமிக்கப்பட்டார். அவர் புதுடெல்லிக்கு சென்று பதவி ஏற்றுவிட்டு அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நடிகர் தர்ஷன்
அப்போது அவரை பா.ஜனதாவினர் விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் கொரோனா விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடந்த பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னாவை ஆதரித்து நடிகர் தர்ஷன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கொரோனா விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு மக்கள் பிரதிநிதிகளும், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் அரசு அறிவித்துள்ள கொரோனா விதிகளை மீறக்கூடாது என்று அறிவுறுத்தியது.
அபராதம்
மேலும் கொரோனா விதிகளை மீறிய தேஜஸ்வி சூர்யா எம்.பி., நடிகர் தர்ஷன் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மாநில அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதற்கு கர்நாடக அரசு சார்பில் ஐகோர்ட்டில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது, “கொரோனா விதிகளை மீறிய தேஜஸ்வி சூர்யா எம்.பி., நடிகர் தர்ஷன் உள்பட 684 பேரிடம் இருந்து தலா ரூ.250 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் தர்ஷன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது“ என்று அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story