பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்றால் நிதிஷ்குமார் சிவசேனாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் சஞ்சய் ராவத் சொல்கிறார்
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றால் அவர் நிச்சயம் சிவசேனாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்ததால், அக்கட்சிகளின் கூட்டணி முறிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து சிவசேனா ஆட்சி அமைத்தது.
இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை விட அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா அதிக இடங்களை வென்றது. இது அரசியல் நோக்கர்களின் புருவத்தை உயர்த்தி இருப்பதோடு, நிதிஷ்குமாருக்கு முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா விட்டுக்கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
நன்றி சொல்ல வேண்டும்
நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றால், அவர் நிச்சயம் சிவசேனாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். மராட்டியத்தில் பா.ஜனதாவை விட நாங்கள் குறைந்த இடத்தில் வெற்றி பெற்றாலும் முதல்-மந்திரி பதவியை கோரினோம். ஆனால் வாக்குறுதியின்படி பா.ஜனதா நடந்து கொள்ளவில்லை. அதே சூழல் தற்போது பீகார் தேர்தலில் வந்துள்ளது. கட்சி பலத்தை பார்க்காமல் நிதிஷ் குமாரை முதல்-மந்திரி ஆக்குவோம் என்று பா.ஜனதா முன்பு கூறியது. பீகாரில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. ஏனெனில் வாக்குறுதியை நிறைவேற்றாததால் மராட்டியத்தில் என்ன நடந்தது என்பதை சிவசேனா காட்டி உள்ளது.
அதேவேளையில் 3 முறை முதல்-மந்திரி பதவி வகித்த நிதிஷ்குமாரின் கட்சி, இந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன் என்று அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த தேர்தலின் ஆட்ட நாயகன். பிரதமர், மத்திய மந்திரிகளின் தீவிர பிரசாரத்திலும், விரோத அரசியல் சூழ்நிலையிலும் 2-வது இடத்தை பெற்று மக்கள் மத்தியில் பளிச்சிட்டு உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story