கொரோனா பிரச்சினை காரணமாக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை மும்பையில் நடந்த முடிவு
கொரோனா பிரச்சினை காரணமாக மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டு தோறும் நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது.
இதில் சட்டசபை சபாநாயகர் நானா படோலே, மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தரேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.
மும்பைக்கு மாற்றம்
அப்போது கொரோனா தொற்று காலத்தில் நாக்பூருக்கு செல்ல பலரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் கோப்புகளை நாக்பூருக்கு மாற்றுவது கடினம் என கூறினர். நாக்பூரில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால், அது கொரோனா பரவலுக்கு கூடுதல் வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரை நாக்பூரில் இருந்து மும்பைக்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. 1960-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது முதல் முறையாக குளிர்கால கூட்டத்தொடர் மும்பையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே டிசம்பர் 7-ந் தேதி சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மீண்டும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி முடிவு எடுக்க உள்ளது.
Related Tags :
Next Story