தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் ஜவகர் பஜாரில் பொதுமக்கள் குவிந்தனர் - கேள்விக்குறியானது சமூக இடைவெளி


தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் ஜவகர் பஜாரில் பொதுமக்கள் குவிந்தனர் - கேள்விக்குறியானது சமூக இடைவெளி
x
தினத்தந்தி 11 Nov 2020 3:30 AM IST (Updated: 11 Nov 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க கரூர் ஜவகர் பஜார் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக தான் இருந்தது.

கரூர்,

இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் முக்கியமாவது, தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனையொட்டி, ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்க கரூர் ஜவகர் பஜார், கோவை ரோடு உள்ளிட்ட கடைவீதிகள் அடங்கிய பகுதியில் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கடைவீதி களை கட்டியது. கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தப்படியே இருந்தது. முன்னதாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக ஜவுளிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்ததை காண முடிந்தது. ஒரு சில பெண்கள், குழந்தைகள் முககவசம் அணியாமல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி முகக்கவசங்களை இலவசமாக வழங்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். முகக்கவசம் அணியாமல் வந்த ஆண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடைவீதிக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் என்.எஸ்.பி. சாலையில் சமூக இடைவெளி என்பது நேற்று கேள்விக்குறியாகத்தான் இருந்தது. ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு செல்லும் அளவுக்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஜவுளி கடைகளிலும் இதே நிலைதான்.

கூட்ட நெரிசலில் நகை திருட்டு, பிக் பாக்கெட், ஜேப்படி போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாலுகா அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் உதவி மையத்தின் மூலமும் போலீசார் பாதுகாப்பு பணிகை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 46 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Next Story