ஆண்டிப்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 22 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் பறிமுதல்
ஆண்டிப்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 22 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான டி.சுப்புலாபுரம், பிஸ்மிநகர், கண்டமனூர், கோவிந்தநகரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதற்கிடையே தொடர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கள் சுல்தான் பாட்ஷா, துரைராஜ், போலீஸ்காரர்கள் சக்திவேல், ராஜ்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி பகுதியில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு பகுதியில், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி சுப்பன் செட்டிதெருவை சேர்ந்த சூர்யா ( வயது24) என்று தெரியவந்தது. மேலும் ஆண்டிப்பட்டி பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 22 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story