ராணிப்பேட்டை, சிப்காட்டில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை ரசிகர்கள் ஏமாற்றம்
ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் உள்ள தியேட்டர்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் சினிமா தியேட்டர்களை பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் உள்ள தியேட்டர்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. தியேட்டர்களில் சமூக இடைவெளியை பின்பற்றி ரசிகர்கள் நின்று செல்வதற்கு வசதியாக இடைவெளியுடன் கூடிய வட்டங்கள் வரையப்பட்டது. இதனால் அரசு உத்தரவு வந்தவுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் நேற்று ராணிப்பேட்டை மற்றும் சிப்காட்டில் உள்ள தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தியேட்டர் நிர்வாகிகளிடம் கேட்டபோது நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர் திறக்கப்படுவதால், புதிய படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்களை திறந்தும் பழைய படத்தை திரையிட்டால் ரசிகர்கள் வரமாட்டார்கள். எனவே தீபாவளியன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய படங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story