வேலூரில் நடந்த ரூ.1½ கோடி நகை கொள்ளையில் புதிய திருப்பம் - உறவினரே கைவரிசை காட்டியது அம்பலம்
வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் நடந்த ரூ.1½ கோடி நகை கொள்ளையில் புதிய திருப்பமாக உறவினரே கைவரிசை காட்டியது அம்பலமானது. அவரே கொள்ளையடித்த நகை-பணத்தை ஒப்படைத்தார்.
வேலூர்,
வேலூர் வள்ளலார் 15-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 63), இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 8-ந் தேதி சந்திரன் மற்றும் குடும்பத்தினர் மாலை நேரத்தில் தேவாலயத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் அறை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2½ கிலோ தங்கம், ரூ.8 லட்சம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1½ கோடி இருக்கும்.
இந்த நிலையில் நேற்று கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டதாக தகவல் பரவியது. மேலும் சந்திரன் வீட்டில் உதவி சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் நேற்று மாலை விசாரணை நடத்தினர்.
விசாரணையை முடித்துவிட்டு அவர்கள் வெளியே வரும்போது, அவர்களிடம் கொள்ளை சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்கள், ‘கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஏதும் மீட்கப்படவில்லை. விசாரணை மட்டும் நடத்தப்பட்டது’ என்றனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் புனிதா தனது கையில் ஒரு கைப்பை வைத்திருந்தார். அதை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது அவர் புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும், பொருட் கள் ஏதும் மீட்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் கேட்டபோது, கொள்ளை போன நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகிறோம் என்றார்.
இந்த நிலையில் பின்னர் நகை-பணத்தை பறிகொடுத்த சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவனூரை சேர்ந்த 25 வயது கொண்ட எங்களது உறவினர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அவர் தான் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் மனம் திருந்தி கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொள்ளையடித்த நகை-பணம் மற்றும் சொத்து ஆவணங்களை உறவினர் ஒருவர் மூலமாக இன்று (நேற்று) மாலை எங்களது வீட்டில் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து நாங்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம்.
போலீசார் வீட்டுக்கு வந்து நகை எடை பார்க்கும் கருவி, பணம் எண்ணும் எந்திரம் மூலம் நகை, பணத்தை சரிபார்த்தனர். மேலும் நாங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதால் சட்ட நடைமுறையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் புனிதா கைப்பையில் அவற்றை எடுத்துச் சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story