கிராம வளர்ச்சி திட்ட குழுக்களுக்கு பயிற்சி கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டத்தை தயாரிக்க கிராம வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
கிராம வளர்ச்சி திட்ட இயக்கத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற கிராம வளர்ச்சித்திட்டம் தயார் செய்ய கிராம ஊராட்சி அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது:-
மக்கள் திட்டமிடல் இயக்கம் சார்பில் கிராம வளர்ச்சித்திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் தலா 9 பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தாங்கள் சார்ந்துள்ள கிராமம் குறித்தும், அங்குள்ள அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள், சுகாதார வசதிகள் குறித்த விவரங்களை சேகரித்து கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும். கணக்கெடுப்பு முடிந்தபின் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட விவரங்களை தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும்.
இந்த தீர்மானங்கள் தொடர்புடைய அலுவலர்களால் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும். வேளாண்த்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் இணைந்து கிராமத்திற்கு தேவையான வளர்ச்சித்திட்டத்தை தயாரிக்கும். இந்த கணக்கெடுப்பு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்டோருக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டால் தங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு வழிவகை ஏற்படும். எனவே இந்த பயிற்சி வகுப்பை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Related Tags :
Next Story