தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை,
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியினர் கருப்புச்சட்டை அணிந்து நேற்றுடன் 365 நாளாகிறது. இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜசோழன் முன்னிலை வகித்தார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழர் தேசிய விடுதலை கொற்றம் கட்சி தலைவர் வியனரசு, மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, மகளிர் அணி செயலாளர் வசந்தி, போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த மகேந்திரன், இளைஞரணி செயலாளர் சின்னதுரை, கட்சி நிர்வாகிகள் தங்கராஜ் பாண்டியன், ஆதி பாண்டியன், மணிமாறன், பரமசிவ பாண்டியன், யாபேஸ் பாண்டியன், முத்து, முருகன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story