அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அதிரடி


அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அதிரடி
x
தினத்தந்தி 11 Nov 2020 8:19 PM GMT (Updated: 11 Nov 2020 8:19 PM GMT)

காரைக்காலில் அதிக சத்தத்தை எழுப்பும் பட்டாகளை வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் தெரிவித்தார்.

காரைக்கால், 

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புத்தம்புது துணிகள், மளிகை சாமான்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்காக கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளியை குதூகலமாக கொண்டாடி மகிழ வைக்க பட்டாசு கடைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு மும்முரமாக வியாபாரம் நடந்து வருகிறது. பல பட்டாசு கடைகளில் சீன பட்டாசு மற்றும் அதிகம் சத்தத்தை எழுப்பும் நாட்டுப் பட்டாசுகள் விற்பனை செய்யப் படுவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

பட்டாசு கடைகளில் ஆய்வு

இதுதொடர்பாக பட்டாசு கடைகளில் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பட்டாசு கடைகளிலும் தீயணைப்பு சாதனங்கள், தண்ணீர் வாளி, மணல் வாளி வைத்திருக்க வேண்டும். அதிகம் சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை விற்பனை செய்யக் கூடாது. பட்டாசுகளை கடையின் வெளியே வைத்து விற்பனைச் செய்யக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசுகளை பாதுகாப்பாக கையாளவேண்டும். முக்கியமாக, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், முகக்கவசம், சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, காரைக்கால் பாரதியார் வீதியில், ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்த பட்டாசு கடை மூடப்பட்டது. முறையான பாதுகாப்பு வசதிகளை செய்தபிறகு அந்த கடையை திறக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story