தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது பலத்த போலீஸ் பாதுகாப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 5:20 AM IST (Updated: 12 Nov 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை, 

தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நெல்லையில் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன் ரத வீதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் திரளான மக்கள் புத்தாடைகளை வாங்கி சென்றனர். பிளாட்பாரங்களில் உள்ள கடைகளிலும் ரெடிமேடு ஆடைகள் விற்பனை மும்முரமாக நடந்தது. பாத்திர கடைகளிலும் மக்கள் கூட்டமாக சென்று, புதிய பாத்திரங்களை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளிலும் தள்ளுபடி விலையில் பல்வேறு ரக பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. தலைதீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு தேவையான புத்தாடைகள், பொருட்களையும் ஏராளமான குடும்பத்தினர் வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்படுவதால், வீட்டுக்கு தேவையான டி.வி., குளிர்சாதனப்பெட்டி, சலவை எந்திரம் போன்றவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

கண்காணிப்பு கோபுரம்

இதனால் நெல்லை டவுன் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அங்கு போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதேபோன்று வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக ஊர்ந்து சென்றன. நகை பறிப்பு, திருட்டில் ஈடுபடுகிறவர்களை பிடிப்பதற்காக, நெல்லை டவுன் ரத வீதிகளில் 34 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிகிறவர்களையும் பிடித்து விசாரிக்கின்றனர். நெல்லை டவுன் வடக்கு ரத வீதியில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும், அதிலிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜவுளி கடைகளுக்கு ஜவுளி எடுக்க வருபவர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில், நெல்லை மாநகர பகுதியில் 500 போலீசாரும், புறநகர் பகுதியில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி சில இடங்களில் நள்ளிரவு வரையிலும் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story