உப்பிலியபுரம் அருகே 2 வயது குழந்தை கடத்தலா? தேடும் பணியில் போலீசார் தீவிரம்
உப்பிலியபுரம் அருகே 2 வயது குழந்தை கடத்தப்பட்டதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்பிலியபுரம்,
நீலகிரி குன்னூரைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 38). தொழிலாளர் நலத்துறையில் ஊழியராக பணிபுரிகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (30). இவர்களின் மகன் ஹாரீசன்(2).
கடந்த வாரம் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே கல்லாத்துக்கோம்பையில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு தேவந்திரன் குடும்பத்துடன் வந்திருந்தார். இங்கு தனது உறவினர் செல்லையா(64) வீட்டில் மனைவி, மகனை தங்க வைத்துவிட்டு, தேவேந்திரன் குன்னூருக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலையில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஹாரீசனை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இதுபற்றி உப்பிலியபுரம் போலீசில் புவனேஸ்வரி புகார் செய்தார்.
அதன்பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை தேடி வருகிறார்கள். குழந்தையை யாராவது கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் கல்லாத்துக்கோம்பையை சுற்றிலும் வயல்வெளிகள், கிணறுகள் இருப்பதால் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணி நடந்து வருகிறது. கொல்லிமலை அடிவார பகுதி இரவில் தேடுதல் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story