முத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 11 பவுன் நகை கொள்ளை - மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்


முத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 11 பவுன் நகை கொள்ளை  - மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்
x
தினத்தந்தி 12 Nov 2020 3:30 AM IST (Updated: 12 Nov 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் நத்தக்காடையூர் அருகே உள்ள மருதுறை ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் மெம்பர் தோட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து கவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 74). இவர்களுக்கு சம்பூர்ணம் (55), விஜயா (48) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே தங்களது கணவர் வீட்டில் குடுமபத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாச்சிமுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வள்ளியம்மாள் மட்டும் பாரதிபுரத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் வள்ளியம்மாள் தனது 12 ஏக்கர் விவசாய நிலத்தை அருகில் உள்ள சிக்காம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (50) என்பவருக்கு குத்தகைக்கு விட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு விவசாயி சுப்பிரமணியம் குத்தகைக்கு எடுத்திருந்த வள்ளியம்மாளின் தோட்டத்தில் சாகுபடி செய்து இருந்த மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்தார். அப்போது வள்ளியம்மாளின் வீடு திறந்த நிலையில் இருப்பதை கண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அங்கு இருந்த பொருட்கள், துணிகள் சிதறி கிடந்ததையும், பீரோ திறந்த நிலையில் இருந்ததையும், வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து வள்ளியம்மாளின் 2 மகள்களுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வள்ளியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

வீட்டில் வள்ளியம்மாள் தனியாக இருந்ததால் அவரை கட்டையால் பின்பக்க தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலி, வளையல், தோடு உள்ளிட்ட 11 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளை அடித்துவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வள்ளியம்மாளின் வீட்டை சுற்றி வந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு படிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நேற்று இரவு 7.30 மணிக்கு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் நேற்று இரவு 8.30 மணிக்கு வள்ளியம்மாளின் உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டியை கொலை செய்துள்ள சம்பவம் நத்தக்காடையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story