அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மமா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்


அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மமா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 11 Nov 2020 11:30 PM GMT (Updated: 12 Nov 2020 3:10 AM GMT)

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, எனது தாயார் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து கொண்டிருந்த போது வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது விருப்பப்படி சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவரது நுரையீரலில் 40 சதவீதம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு அதிகரித்து, 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மரணம் அடைந்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக தற்போது எதிர்க்கட்சி தலைவர் அவதூறாக பேசி வருகிறார். அவர் விரக்தியின் விளிம்புக்கே போய்விட்டார். யாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்படுவார்கள். அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டிருந்த அதே தனியார் ஆஸ்பத்திரியில்தான் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மு.க.ஸ்டாலின் யாரை சந்தேகிக்கிறார்? சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், செவிலியர்களையுமா? சந்தேகிக்கிறார். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது யாரும் அங்கு செல்ல முடியாது. நான் கூட மருத்துவமனைக்கு சென்று வீடியோ மூலம்தான் அவரை பார்த்து வந்தேன். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் பொய்யான ஒரு புகாரை கூறி வருகிறார்.

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது? என்று சொல்லுங்கள். அவர் குடும்பத்தார் கூட அவரை சென்று பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் வேண்டும் என்றே தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் நினைத்தது எல்லாம் பகல் கனவாக போய் விட்டது.

இந்த ஆட்சி 10 நாளில் போய்விடும், ஒரு மாதத்தில் போய்விடும், 3 மாதங்களில் போய்விடும், 10 மாதங்களில் போய்விடும், இந்த ஆண்டு போய்விடும், அடுத்த ஆண்டு போய் விடும் என்று நினைத்தார். இடைத்தேர்தலில் அதிக இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று நினைத்தார். எல்லாமே பகல் கனவாக போய்விட்டது.

தேடி, தேடிப்பார்த்தும் இந்த ஆட்சியைப்பற்றி குறைகூற முடியாததால் மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் செய்கிறார். அவரது தந்தையார் இதே மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார். அப்படி ஆனால் அவர் மரணத்திலும் என்ன மர்மம் உள்ளது என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.

மருத்துவமனையில் டாக்டர் களும், செவிலியர்களும் தான் சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் மனிதாபிமானம் இல்லாமல் மலிவான அரசியல் செய்யும் ஒரே அரசியல்வாதி, மு.க.ஸ்டாலின் தான்.

கொரோனாவால் இறந்தவர்களில் உடலை கூட அப்படியே தூக்கி போட்டு விடுகிறார்கள். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவசரமாக வெளிநாடுகளில் இருந்து மருந்து வேண்டும் என்று கேட்டார்கள். மனிதாபிமான அடிப்படையில் அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று நாங்கள் பார்ப்பதில்லை. அனைத்து மனித உயிரும் முக்கியம் தான்.

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு தேவையான மருந்துகளை வரவழைத்து அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்க நாங்கள் பார்த்துக்கொண்டோம்.

எதில்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற விவஸ்தை இருக்க வேண்டும். மனதில் ஈவு, இரக்கம் இருக்க வேண்டும். ஈவு, இரக்கம் இல்லாத அரசியல்வாதி என்றால் அது மு.க.ஸ்டாலின் தான். இந்த நடைமுறை மிகுந்த வேதனையை அளிக்கிறது. அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதனை செயல்படுத்துவது அரசு அதிகாரிகள் தான்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது, தமிழகத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என முன்பு மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினாரே? இன்று கேரளாவில் பாதிப்பு அதிகரித்துள்ளதே அது குறித்து வாய்பேச மறுப்பது ஏன்?

புதிதாக கட்சி தொடங்கி உள்ளவர், அவர் பெயரை சொல்லி விளம்பரப்படுத்த விரும்பவில்லை, அவர் ‘கேரளாவை பார்’ என்று கூறினாரே? இன்று கேரளாவுக்கு சென்று அங்கு 10 நாள் தங்கி இருந்து பார்த்து வர வேண்டியது தானே?

அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், பல்வேறு துறை அதிகாரிகளும்தான் காரணம். அவர்களை குறை சொல்லக்கூடாது, கொச்சைப்படுத்த கூடாது. எங்களை விமர்சனம் செய்வதால் பாதிக்கப்படுவது அரசு அலுவலர்கள் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரா? தினசரி எடப்பாடி பழனிசாமியை தான் குறைகூறிக் கொண்டு இருக்கிறார்.

இந்த ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மு.க.ஸ்டாலின் கூட வர இருக்கின்ற தேர்தலில் நிற்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏன் எனில் அவரது தேர்தல் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி விட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையானால் 6 வருடங்கள் அவர் தேர்தலில் நிற்க முடியாது. நல்லது நினைத்தால், நன்மை கிடைக்கும். தீயதை நினைத்தால் ஆண்டவன் பார்த்துக்கொள்வார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story