காற்றின் வேகம் குறையாததால் பாம்பன் பாலத்தின் மீது மோதி நிற்கும் மிதவையை மீட்பதில் தொடரும் சிக்கல் - 3 நாட்களாகியும் மீட்க முடியவில்லை
காற்றின் வேகம் குறையாததால் பாம்பன் பாலத்தின் மீது மோதி நிற்கும் மிதவையை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் கடல் பகுதியில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த புதிய ரெயில் பாதை பணிகளுக்காக தற்போது உள்ள ரெயில் பாலத்தையொட்டி உள்ள வடக்கு கடல் பகுதியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட இரும்பு பெரிய மிதவைகள் கடலில் நிலை நிறுத்தப்பட்டு அந்த மிதவையின் மீது கடலில் தூண்கள் அமைக்க பயன்படும் நவீன இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல உபகரணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதுபோல் பாம்பன் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பலத்த காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக ரெயில் பாலத்தின் அருகில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேனுடன் கூடிய இரும்பினாலான மிதவை ஒன்று கடந்த 9-ம் தேதி இரவு ரெயில் பாலத்தின் மீது மோதியபடி நின்றது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ரெயில் பாலத்தில் மோதிய இரும்பினாலான மிதவை மீட்டு எடுக்க முடியவில்லை.
பாம்பன் ரெயில் பாலத்தின் மீது மிதவை மோதி நிற்பதால் கடந்த 2 நாட்களாகவே ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் இல்லாமல் மண்டபம் வரையிலும் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டு மண்டபத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லப்பட்டு சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது.
இதேபோல் சென்னையில் இருந்து வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலும் மண்டபத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாம்பன் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக ரெயில் பாலத்தின் மீது மோதி நிற்கும் கிரேனுடன் கூடிய இரும்பினாலான மிதவையை 3-வது நாளாக நேற்றும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த மிதவையானது ரெயில் பாலத்தின் தூண்களின் மீது உரசியபடியே நின்று வருகின்றன.
காற்றின் வேகம் குறைந்ததும் அந்த மிதவையை மீட்பதற்கான பணிகளை செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) காற்றின் வேகம் குறைவாக இருக்கும்பட்சத்தில் ரெயில் பாலத்தின் மீது மோதி நிற்கும் இரும்பினாலான மிதவை மீன்பிடி படகுகள் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து கரையோரத்தில் நிறுத்தி வைக்க ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பாம்பன் ரெயில் பாலத்தின் மீது மோதி நிற்கும் மிதவையானது மீட்கப்பட்ட பின்னரே பயணிகளுடன் பாம்பன் ரெயில் பாலத்தில் வழக்கம் போல் ரெயில் போக்குவரத்து இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதுபோல் ரெயில் பாலத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிரேன் உடன் கூடிய மற்ற மிதவைகளையும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story