பட்டிவீரன்பட்டி அருகே வளர்ச்சி பணிகளுக்காக திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த வார்டு உறுப்பினர்
பட்டிவீரன்பட்டி அருகே வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த ஊராட்சி வார்டு உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் கண்ணன் (வயது 53). இவர் நேற்று மேல் சட்டை அணியாமல் உடலில் நாமம் பூசிக்கொண்டு, சித்தரேவு பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். ஒரு கையில் திருவோடும், மற்றொரு கையில் கோரிக்கை தட்டியை ஏந்தியபடியும் கண்ணன் வந்தார். அப்போது சாலையில் சென்றவர்களிடம் தனது வார்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறவில்லை. எனவே அதனை நிறைவேற்ற பிச்சை போடுமாறு கூறி அவர் பிச்சை கேட்டார். அதில், சிலர் கோரிக்கை தட்டியை படித்துவிட்டு கண்ணனின் திருவோட்டில் சில்லரை மற்றும் பணத்தை போட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த நூதன போராட்டம் குறித்து கண்ணன் கூறுகையில், “எனது வார்டில் உள்ள கோட்டைபட்டியில் கழிவுநீர் முறையாக செல்ல வாய்க்கால் வசதி இல்லை. இதனால் தெருவின் நடைபாதையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த வார்டில் தண்ணீர் பற்றாக் குறை நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறுகள் சரி செய்யப்படாமல் உள்ளன. எனவே இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினேன். அப்போது ஊராட்சியில் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். எனவே எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் போடக் கூடாது என்பதற்காக வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற உடலில் நாமம் போட்டுள்ளேன். பிச்சை எடுத்து திட்டப்பணிகளை நிறைவேற்றுவேன்” என்றார்.
இதுகுறித்து சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவி வளர்மதி மலர்கண்ணனிடம் கேட்டபோது, மாநில நிதிக்குழு மானிய நிதி 7 மாதங் களாக வராத காரணத்தினால் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை சரிவர செய்ய முடியவில்லை. மேலும் ஊராட்சியில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு கூட சிரமப்பட வேண்டியுள்ளது. மாநில நிதிக்குழு மானியம் வந்தவுடன் ஊராட்சி மன்ற உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story