கணக்கில் வராத ரூ.46 ஆயிரம் சிக்கியது: வேடசந்தூர் தாசில்தார் உள்பட 3 பேர் மீது வழக்கு - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.46 ஆயிரம் சிக்கியது. இதுதொடர்பாக தாசில்தார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரிடம் அன்பளிப்பு பெறுவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது தாசில்தார் லதா அலுவலக வளாகத்தில் இருந்து ஜீப்பில் கடந்து செல்ல முயன்றார். உடனே ஜீப்பை தடுத்து நிறுத்திய போலீசார், தாசில்தாரை தாலுகா அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா அலுவலகத்தின் கதவுகளை உள்புறமாக பூட்டிவிட்டு ஆவணங்களை சோதனை செய்தனர். இதுதவிர தாசில்தார் லதாவின் கைப்பையை சோதனை செய்தனர். அதில், ரூ.46 ஆயிரம் இருந்தது. உடனே இந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்று போலீசார் கேட்டனர். அப்போது தனது குடும்பத்தினருக்கு தீபாவளி ஆடைகள் எடுப்பதற்காக தனது கணவரிடம் இருந்து பெறப்பட்ட பணம் என்று தாசில்தார் லதா கூறினார். ஆனால் அந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான உறுதியான ஆதாரம் மற்றும் ரசீது இல்லை. இதனால் அதற்கான ஆதாரத்தை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பிக்கவேண்டும் என்று தாசில்தாரிடம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வாக்குமூலம் பெறப்பட்ட ஆவணங்களுடன் அதிகாலை 3 மணிக்கு பிறகு தான் அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுக்கல் புறப்பட்டு சென்றனர். மேலும் தாசில்தார் லதா, அவருடன் ஜீப்பில் வந்த கிராம உதவியாளர் சவுந்திரபாண்டி, ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் பாண்டி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை, அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடந்தது. இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story