3 மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை: மனமுடைந்த கணவரும் தூக்குப்போட்டு சாவு


3 மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை: மனமுடைந்த கணவரும் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 12 Nov 2020 5:56 PM IST (Updated: 12 Nov 2020 5:56 PM IST)
t-max-icont-min-icon

மலப்புரம் அருகே 3 மகன்களை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மனமுடைந்த கணவரும் தூக்குப்போட்டு உயிரிழந்தார்.

பாலக்காடு,

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே போத்துக்கல் பகுதியை சேர்ந்தவர் ராமன்(வயது 42). கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரகனா (வயது 33). இவர்களுக்கு ஆதித்யன் (13), அர்ஜூன் (11), ஆனந்த் (8) ஆகிய மகன் இருந்தனர்.

இதற்கிடையில் கடந்த 7-ந் தேதி காலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ராமன் வேலைக்காக வெளியே சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனது 3 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ரகனாவும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மனைவி மற்றும் மகன்கள் சாவுக்கு காரணம் ஆகிவிட்டோமே? என்ற மன உளைச்சலில் ராமன் இருந்து வந்தார். மேலும் அவரிடம் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்துக்குள் சென்று, மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழிக்கடவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக அடுத்தடுத்து 5 பேரின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story