கோட்டயம் மாவட்டத்தில் பலத்த மழை மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம்


கோட்டயம் மாவட்டத்தில் பலத்த மழை மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 12 Nov 2020 6:01 PM IST (Updated: 12 Nov 2020 6:01 PM IST)
t-max-icont-min-icon

கோட்டயம் மாவட்டத்தில் மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் அடைந்தன.

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமரகம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில், வீடுகள் சேதம் அடைந்தன. சில இடங்களில் குடிசை மற்றும் தர சீட் பொருத்தப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. வீடுகளை இழந்தவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் பல இடங்களில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால், மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது. இதனால் இரவில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலைகளிலும் மரங்கள் சாய்ந்து கிடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தவிர மழைநீர் புகுந்ததில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நாசமாகி உள்ளன.

இதையடுத்து மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் அதிகாரிகள் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

சாய்ந்து விழுந்த மரங்களை போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மின்வாரிய ஊழியர்கள் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

கோட்டயத்தில் ஏற்பட்டு உள்ள மழை பாதிப்புகளை கணக்கெடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க உள்ளனர். அதன்பிறகு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும். அதிர்ஷ்டவசமாக மழைக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும் மீண்டும் சீராக மின் வினியோகம் செய்ய 2 நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story