மாவட்டத்தில் 80 கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு - கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்


மாவட்டத்தில் 80 கால்நடை பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு - கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2020 8:55 PM IST (Updated: 12 Nov 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் 80 கால்நடை பாதுகாப்புத்திட்ட மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.

பர்கூர், 

பர்கூர் ஒன்றியம் பெலவர்த்தி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முகாமில், மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் (பொறுப்பு) மரியசுந்தர், உதவி இயக்குனர்கள் அருள்ராஜ், முரளிசதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில் கலெக்டர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ சேவை எளிதில் கிடைக்கவே இந்த முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டில் மாவட்டத்தில் 80 கால்நடை பாதுகாப்புத்திட்ட மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று பேசினார்.

இந்த முகாமில், கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்க மருந்தூட்டல், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 345 மாடுகள், ஒரு எருமை, 292 செம்மறி ஆடுகள், 386 வெள்ளாடுகள், 70 பன்றிகளுக்குதடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து தீவனம், சோளம் மற்றும் காரமணி, தாது உப்பு கலவை ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் திருமுருகன், வேல், தினேஷ், தாசில்தார் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தேவராஜ், வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கிராம ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story