தாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டம் முதல்-அமைச்சர் அறிவிப்பு


தாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டம் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2020 5:19 PM GMT (Updated: 12 Nov 2020 5:19 PM GMT)

தாமிரபரணி உபரிநீரை வைப்பாறு கொண்டு செல்ல ரூ.254 கோடியில் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இருதய சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கி வைத்தேன். நாங்கள் வரும்போதெல்லாம் ஏழை, எளிய மக்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஏற்கனவே 600 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 106 ஏக்கர் நிலம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிநீர் இணைப்புகள்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.995 கோடியில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரூ.282.44 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ரூ.95 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ.256 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்ட தொழிற்கூடத்தை ரூ.634 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளோம்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 278 பஞ்சாயத்துகளில் 982 குக்கிராமங்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 665 வீடுகளுக்கு ரூ.90.76 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பசுமை வீடுகள் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டு ரூ.5.73 கோடி மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.

2019 உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் ஸ்பிக் நிறுவனம் ரூ.3,706 கோடி மதிப்பில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உரங்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

புதிய திட்டங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பாற்று ஓடை, மலட்டாறு ஓடை, கல்லாறு, வைப்பாறு ஆகிய பகுதிகள் குறைந்த அளவிலான மழை நீரை பெறுகின்றன. இதனால் தாமிரபரணி ஆற்றில் உபரி நீரை சீவலப்பேரி தடுப்பணையில் இருந்து 40 மீட்டர் நீரேற்றம் செய்து, 12.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூவானி, குவசன் குளம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய கால்வாய் அமைத்து, உப்பாறு, மலட்டாறு, கல்லாறு மற்றும் வைப்பாறு நதிகள் முத்தலாபுரம் கிராமம் அருகே இணைக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 200 கனஅடி தண்ணீர் நீரேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரில் 173 மில்லியன் கனஅடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டம் ரூ.264 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மினி கிளினிக்

வேம்பாரில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தூண்டில் வளைவில் இருந்து 500 மீட்டருக்கு புதிய கடல் அரிப்பு தடுப்புச்சுவர் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. கோவில்பட்டியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் ரூ.31 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். கோவில்பட்டி வானரமுட்டி, சிவஞானபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்கப்படுகிறது. அதில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். இந்த ஆஸ்பத்திரிகள் மாலையில் திறக்கப்படும். அந்தந்த பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறலாம். இந்த திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

பால் பண்ணை

தமிழ் அகராதியின் தந்தை என்று போற்றப்படும் வீரமாமுனிவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது. வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் ரூ.73 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. கயத்தாறு பகுதியில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். முடிவைத்தானேந்தல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் 50 ஆயிரம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்ட பால் பண்ணை ரூ.45.75 கோடி மதிப்பில் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story