வேலை கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடி பணி ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


வேலை கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடி பணி ஆணை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 12 Nov 2020 5:30 PM GMT (Updated: 12 Nov 2020 5:30 PM GMT)

தூத்துக்குடியில் வேலை கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி பணி ஆணை வழங்கினார்.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு குறித்தும், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளுக்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றார்.

முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் துறைக்கு மருத்துவ நோயியல் முடுக்கி கருவியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கார் மூலம் சென்றுகொண்டிருந்தார்.

மாற்றுத்திறனாளி பெண் மனு

அப்போது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது கையில் ஒரு மனுவை வைத்துக்கொண்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் நின்றதைப் பார்த்தவுடன் உடனடியாக எடப்பாடி பழனிசாமி தனது காரை நிறுத்தி அந்த மாற்றுத்திறனாளி பெண்மணியை அருகிலே அழைத்து, அவரிடம் என்ன வேண்டும்? என்று கேட்டார். அந்த பெண்மணி, “ஐயா நான் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர். எனது பெயர் மாரீஸ்வரி. எனக்கு திருமணமாகிவிட்டது. எனது கணவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். எனக்கு 5 வயதில் ஷாலினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. எனது கணவரின் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. மாற்றுத்திறனாளியான நான், எனது குடும்பத்தினை காப்பாற்ற எனக்கு ஏதாவது ஒரு வேலை வேண்டும்“ என்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து மனு அளித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி

எடப்பாடி பழனிசாமி, மாற்றுத்திறனாளியிடம் மனுவைப் பெற்றுக்கொண்டு, அந்த பெண்மணியை உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு அழைத்து வருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் மாரீஸ்வரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை எடப்பாடி பழனிசாமி, அந்த பெண்மணிக்கு வழங்கினார்.

பணி நியமன ஆணையை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, இந்த பணியின் மூலம் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாக கிடைக்கும் என்றும், எனவே இந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என அறிவுரை கூறினார். பணி நியமன ஆணையை முகமலர்ச்சியோடு பெற்றுக்கொண்ட மாரீஸ்வரி தனது வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் மனு அளித்தவுடன் எனது கோரிக்கையினை ஏற்று உடனடியாக மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியினை வழங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Next Story